சென்னை, நவம்பர்-30, வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் (Fengel) புயல், இன்று பிற்பகல் வாக்கில் சென்னை அருகே கரையைக் கடப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடைமழை பெய்யுமென, தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலின் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தின் காற்று வீசும்; இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்றும் வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பூங்காக்கள் மற்றும் மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தியுள்ளன.
புயல் எதிரொலியால் ராட்சத விளம்பரப் பலகைகளையும் கட்டுமானத் தளங்களில் கிரேன்களை இறக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதால் சென்னைக்கான 13 விமானப் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.