Latestமலேசியா

இன உணர்வை தூண்டாதீர் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு – தியோ நீ சிங் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 8 – எதிர்க்கட்சித் தலைவர்கள் இன உணர்வுகளை தூண்டக்கூடாது என தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக்கொண்டார். கெப்பாலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முகமட் தவறான மற்றும் இனவாத அறிக்கைகள் தொடர்பான அண்மைய குற்றச்சாட்டை ஜ.செ.கவின் தேசிய விளம்பர பிரிவு செயலாளருமான தியோ நீ சிங் மறுத்தார். பாஸ் கட்சி உறுப்பினரான சித்தி மஸ்துரா நாட்டில் இனப் பதற்றத்தை உருவாக்கவும் DAP கட்சியைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை மலேசியர்களுக்கு கொண்டுச் செல்ல முயற்சிப்பது தெளிவாக தெரிவதாக DAP யின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவியுமான தியோ நீ சிங் தெரிவித்தார்.

DAP தலைவர்களான அந்தோணி லோக், லிம் கிட் சியாங், ங்கா கோர் மிங், தெரசா கோக் மற்றும் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ ஆகியோர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்குடன் இரத்த உறவு வைத்திருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் போலியானது என அவர் கூறினார்.

DAP மற்றும் அக்கட்சியின் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எப்போதும் எதிர்க்கட்சியினர் இம்மாதிரியான உண்மைக்கு புறம்பான தகவலை பயன்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்பு பக்காத்தான் கூட்டணியின் கீழ் DAP மற்றும் பாஸ் கட்சிகள் இணைந்து பணியாற்றியபோது இதுபோன்ற பிரச்னை எழுந்ததில்லை என்று தியோ நீ சிங் தெளிவுபடுத்தினார். இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது நாட்டின் இன ஒற்றுமையை பிளவுபடுத்தும். எனவே இன உணர்வுகளை தூண்டுவதைத் தொடர வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு தாம் நினைவூட்ட விரும்புவதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!