கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – ம.இ.கா மீது பலர் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும் இந்நாட்டில் பிற இனங்களோடு ஐக்கியத்தைப் பேணி ஒற்றுமையுணர்வோடு வாழ்ந்து நாட்டில் அமைதி சூழலை அரசியல் ரீதியாக உறுதி செய்வதில் பெரும் பங்காற்றியிருப்பதை யாரும் மறுக்க முடியாது என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
1969-ஆம் ஆண்டு நாட்டில் நடந்த இனக் கலவரத்திற்கு பிறகு இன ஒற்றுமையைக் கட்டிக் காப்பதில் மிதவாத அரசியல் அணுகுமுறையின் வழி எப்படிப்பட்ட இனவாத பிரச்சனை தலைதூக்கினாலும் பிற இன கட்சிகளோடு அமர்ந்து அதனை களையும் நடவடிக்கைகளில் ம.இ.கா முழு கடப்பாட்டோடு செயல்பட்டுள்ளது.
அதனால்தான் நாடும் மக்களும் அமைதியான சூழலில் வாழ்ந்து முன்னேற்றத்தை நோக்கி செல்ல முடிந்ததாக நேற்று ஜோகூர் மாநில ம.இ.கா மாநாட்டை தொடக்கி வைத்த போது தமதுரையில் அவர் தெரிவித்தார்.
இதனை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அமைதி ஏனோ தானாக உருவாகியதாக எண்ணி அதனை மதிக்காமல் போனால் அதன் பின்விளைவுகள் விபரீதமாக அமையலாம் என்றார் விக்னேஸ்வரன். அண்மையில் வங்காளதேசத்தில் நடந்த கலவரத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறும்பான்பையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் நாம் பயந்து வாழ வேண்டும் என அர்த்தமில்லை. நம்
சமூக உரிமைக்கு நாம் எப்போதும் குரல் கொடுக்கலாம். ம.இ.கா-வும் அதில் விட்டுக் கொடுக்காது.
ஆனால் இன சமய பிரச்சனைகள் நாட்டில் பெரிதாக தலைதூக்காமல் இருக்க நாம் நமது அணுகுமுறையில் கவனமாக இருக்க வேண்டும். வெறுமனே உணர்ச்சியை தூண்டும் அரசியலில் நாம் விழுந்துவிடக்கூடாது.
அதைத்தான் ம.இ.கா சுதந்திரத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி நாட்டின் ஒற்றுமைக்காக அரசியலில் ஒரு சரிசமன் நிலையை கட்டிக்காப்பதில் கவனமுடனும் பொறுப்புடனும் செயப்பட்டு வருவதாக விக்னேஸ்வரன் கூறினார்.