
கோலாலம்பூர் , மார்ச் 17 – இன மற்றும் சமய வெறுப்புணர்வு தூண்டுவோருக்கு எதிராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு இனங்களுக்கிடையே வெறுப்புணர்வு தீயை மூட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு தாம் பணித்திருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில தரப்பினர் வெறுப்பு அல்லது அவநம்பிக்கையை சவாலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்டு சிலர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடும் என்றும் அன்வார் நினைவுறுத்தினார். அனைத்து இன மக்களின் அமைதி மற்றும் ஐக்கியத்தை தற்காப்பதில் தாமும் அமைச்சரவை உறுப்பினர்களும் உறுதிப்படுத்துவோம் . நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.