
கோலாலம்பூர், நவ 19 – இன மற்றும் சமய பாகுபாடு இன்றி திறமையின் அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கும் கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டால் சாதனை படைப்பதற்கு பலர் தயாராய் இருக்கின்றனர் என்பதை UTeM எனப்படும் மலேசிய மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்று அரச விருதுப் பெற்ற நவீன் முத்துசாமி துணிச்சலோடு ஏற்புரை நிகழ்த்தியுள்ளார். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி அப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை இந்திய சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. சமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் நவீனின் உரையை நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருவதோடு அதனை வைரலாக்கி வருகின்றனர்.
UTeM பல்கலைக்கழகத்தின் மாணவர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான நவீன் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையில் திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று துணிச்சலாக குரல் கொடுத்ததோடு திறமையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கும் உயர்க்கல்வி வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தார். எஸ்.பி. எம் தேர்வில் தம்மைவிட ஒரு A குறைவாக பெற்றதால் நண்பர் மெட்ரிகுலேசன் வாய்ப்பை பெறவில்லை . அந்த நண்பரின் கதையை நவீன் பட்டமளிப்பு விழாவில் பகிர்ந்து கொண்டார். ஆனால் மெட்ரிகுலேசன் கிடைத்த பின்னர்தான் அவரைவிட குறைவான தேர்வு முடிவுகள் பெற்றவர்களில் பலர் மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக நவீன் வேதனையோடு தெரிவித்தார்.
உண்மையில் என் நண்பருக்கு மட்டும் மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த பட்டமளிப்பு விழாவில் தமக்கு பதிலாக அவர்தான் உரையாற்றியிருப்பார் என்றும் நவீன் தெரிவித்தார். மலேசியாவில் திறமைக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கினால் பல சதானையாளர்களை உருவாக்க முடியும் என்பதை உயர்க் கல்வி அமைச்சு உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு ” நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் , ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழியைக் தமிழில் கூறி தமது உரையை நவீன் முடித்தார்.