புதுடில்லி, ஜன 3 – தாய்லாந்துக்குச் சுற்றுலா மேற்கொண்ட காதல் தம்பதியர் தங்கியிருந்த ஹோட்டலின் கழிப்பறை குழிக்குள் இருந்து உடும்பு ஒன்று எட்டிப்பார்த்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Pathum Thani எனுமிடத்தில் தங்கியிருந்தபோது தனது காதலி கழிப்பறையை பயன்படுத்த முற்பட்டபோது, கழிப்பறைக் குழிக்குள் இருந்து பெரிய நீர் உடும்பு ஒன்று எட்டிப்பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சுற்றுப்பயணி அந்தக் காட்சியைத் தனது டிக்டாக் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
அதில் கழிப்பறைக் குழிக்குள் இருந்து நீர் உடும்பு ஒன்று வெளிவருவதையும், வந்த விருந்தாளியை நலம் விசாரிப்பதுபோல் எட்டிப்பார்த்துவிட்டு பின் வந்தவழியே திரும்பிப்போவதையும் காணமுடிகின்றது. பார்ப்பவர்களைப் பதைபதைக்கச் செய்யும் சம்பந்தப்பட்ட காட்சி தற்போது வைரலாகிவருவதோடு, சமூக வலைத்தளவாசிகள் பலரும் வேடிக்கையான கருத்துகளையும் ஒரு சிலர் தங்கள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.