Latestமலேசியா

இப்போது என் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறேன் – லோ சியு ஹோங்

கோலாலம்பூர், பிப் 25 – தனது பிள்ளைகளை மீட்க, தாய் Loh Siew Hong நடத்திய போராட்டம், கடந்த சில வாரங்களாக நாட்டின் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன.

சொந்த பிள்ளைகளைக் காண முடியாத ஒரு தாயின் பரிதவிப்பு இறுதியில் முடிவுக்கு வந்ததை எண்ணி பலரும் சந்தோஷப்பட்டனர். தற்போது பிள்ளைகளுடன் இணைந்து விட்ட Loh, அடுத்து என்ன செய்கிறார் ? என்ன திட்டங்களை அவர் வைத்துள்ளார் என , அவரது போராட்டத்தை பின்தொடர்ந்த மக்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பர்.

அந்த ஆவலைப் பூர்த்தி செய்ய விரும்பிய வணக்கம் மலேசியா, லோவைத் தொடர்பு கொண்டது. இன்னும் வேலைக்கு திரும்பாத தாம், தனது பிள்ளைகளுக்கு பிடித்த உணவை சமைப்பது, அவர்களோடு பொழுதைக் கழிப்பது என இத்தனை காலம் தமக்கிருந்த ஏக்கத்தை எல்லாம் இறக்கி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார் லோ.

குடும்ப வன்முறையால் பல சோதனைகளைக் கடந்து வந்திருக்கும் தாம், இனி தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக, Food Truck எனப்படும் டிரக் வண்டியில் உணவு வியாபாரத்தை செய்ய திட்டமிட்டிருப்பதாக Loh தெரிவித்தார்.

எனது பிரச்சனை பொதுவில் தெரிய வந்தபோது, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், இந்தியர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என இன வேறுபாடின்றி பலரும், பிள்ளைகளைத் தாயிடமே ஒப்படைக்கும்படி எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அவர்களது குரல் எனது போராட்டத்திற்கு வலு சேர்த்தது. அதற்கு அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அதே வேளை பிள்ளைகளுக்காக தான் நடத்திய இந்த போராட்டம் , நாட்டில் இதுவே கடைசியாக இருக்க வேண்டுமென்பதே தமது எதிர்பார்ப்பாகுமென லோ குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்கு தாயும், எனக்கு எனது பிள்ளைகளும் கிடைத்து விட்டனர். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குடும்பமாக உணர்கிறோம். இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்பதே எனது அவா ஆகுமென்கிறார் லோ. அதுவே நமது ஆசையும் கூட.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!