
மணிப்பூர், நவ 20 – இம்பால் (Imphal) விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடு நிலையத்திற்கு அருகில் தரையிலுள்ள மக்கள் மதியம் 2 மணியளவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளைக் கண்டனர். அதன் பிறகு மூன்று விமானங்கள் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டன. இம்பால் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் இரண்டு விமானங்களும் ஒரு இண்டிகோ (IndiGo) விமானமும் ஓடும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் ரன்வே அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்ததையடுத்து இம்பால் விமான நிலையத்திற்கு வரவிருந்த இரண்டு விமானங்கள் கொல்கத்தா மற்றும் கவுகாத்தி (Guwahati) நகர்களை நோக்கி திருப்பி விடப்பட்டன.
விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள “கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியை” மூடிவிட்டு அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிறுத்தினர். வான்வெளி மூடப்பட்டதால் சுமார் 1,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வான்வெளி கட்டுப்பாட்டை இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்தது. அதன் பிறகு மீண்டும் விமான நிலையத்தில் வழக்கமாக விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன.