கோலாலம்பூர், பிப் 7- தமிழர் திருநாளையும் பொங்கல் விழாவையும் முன்னிட்டு பன்னாட்டு நிலையில் இயங்கலையில் நடத்தப்பட்ட கொண்டாட்டத்தின்போது, 18 தமிழர் கலைகள் அரங்கேற்றப்பட்டு , அந்த முயற்சி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.
RagsStar Fusion மின்னியல் ஊடகத்தின் நிறுவனரும் சங்கீத நாட்டிய குருகுலத்தின் தோற்றுனருமான முனைவர் டாக்டர் இராகவி பவனேஸ்வரி தலைமையில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி, தமிழர்களின் கலை,கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தொன்மங்களையும் மரபுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்பட்டது.
மேலும் கருத்தாடலில் தமிழர்த் திருநாளின் வரலாற்று விழுமியங்களும் பொங்கலிடுதல் தொடர்பான விளக்கங்களும் தரப்பட்டன. மலேசியா, சிங்கப்பூர் இரு நாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் பொங்கல் வைத்தல், உறி அடித்தல், சிலம்பாட்டம், கரகாட்டம், தோரணம் முடைதல், சரம் தொடுத்தல், பாரம்பரிய ஆடை அலங்கார படைப்பு, பொங்கல் பானை அலங்கரிப்பு, என 18 தமிழர்க் கலைகளை இணைய அரங்கில் இணைந்து உலக சாதனையைப் படைத்தனர்.