கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – விமானம் தாமதமானதால் 24 மணி நேரங்களுக்கு விமான நிலையத்திலேயே பயணிகள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக, Malaysia Airlines விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
ஆகஸ்ட் 12-ம் தேதி கட்டாரின் டோஹாவிலிருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய MH165 விமானம் தாமதமானதற்கு இயந்திரக் கோளாறே காரணம்.
துரதிஷ்டவசமாக அடுத்தடுத்த புறப்பாடுகளும் பாதிக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் MAS விளக்கியது.
விமான இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, எதிர்காலத்தில் இது போன்ற இடையூறுகள் ஏற்படாதிருப்பது உறுதிச் செய்யப்படுமென்றும் அது உத்தரவாதமளித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு Qatar Airways விமானத்தில் முன்பதிவுகள் செய்வதற்கான வாய்ப்பும், தங்குமிடமும், உணவுகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டதையும் MAS உறுதிப்படுத்தியது.
அவ்விமானம் 24 மணி நேரங்களுக்குத் தாமதமானதால் பயணிகள் சினமடைந்த கூச்சலிட்ட வீடியோக்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
விமானம் தாமதமானது தொடர்பான தகவல் பரிமாற்றமும் சுமூகமாக இல்லையென சில பயணிகள் குற்றஞ்சாட்டினர்.