
சிட்னி, ஜன 18 – விமானத்தில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் ஒரு இயந்திரத்தோடு ஆஸ்திரேலியாவின் குவாண்டஸ் விமானம் பத்திரமாக சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியது. உயிரை கையில் பிடித்திருந்த அவ்விமானத்தில் இருந்த 100 -க்கும் மேற்பட்ட பயணிகள் விமானம் தரையிறங்கியவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டபோது அதன் இரண்டு இயந்திரங்களில் ஒன்று செயல் இழந்ததை விமானி கண்டறிந்தார். Tasman கடல் பகுதி மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது இயந்திரம் பழுதடைந்ததை அவர்கள் உணர்ந்தனர்.
இது சிறிய பிரச்சனைதான் அது குறித்து கவலை அடைய வேண்டியதில்லை என விமானிகள் பயணிகளுக்கு தகவல் தந்தனர். அதோடு அந்த விமானம் விபத்தில் சிக்க வாய்ப்ப்பிருப்பதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் எச்சரிக்கையை தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து சிட்னி விமான நிலையத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்சுகள் மற்றும் மீட்பு குழுவினரும் குவிக்கப்பட்டனர். பரபரப்பான சூழ்நிலையில் பயணிகள் இருந்தபோதிலும் விமானத்தை விமானிகள் மிகவும் கவனமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்புடன் தரையிறக்கினர்.