புத்ராஜெயா, செப்டம்பர் -5, பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சு அனுப்பியிருந்த இரகசிய அரசு தந்திர ஆவணமொன்று கசிந்த விவகாரம் குறித்து, விஸ்மா புத்ரா போலீசில் புகார் செய்யவுள்ளது.
அந்த ஆவணம் கசிந்ததில் அமைச்சைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறிய உள் விசாரணையும் மேற்கொள்ளப்படும்.
பிப்ரவரி 18-ஆம் தேதியிடப்பட்ட அந்த ஆவணம் குறித்து கடந்த வாரம் பிலிப்பின்ஸ் நாட்டின் ஊடகமொன்று கட்டுரை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரு நாடுகளின் அதிகாரப்பூர்வ தொடர்பு முறையான அந்த இரகசிய ஆவணம் பொதுவில் கசிந்திருப்பதை கடுமையாகக் கருதுவதாக விஸ்மா புத்ரா கூறியது.
மலேசியாவும் சீனாவும் அணுக்கமான நல்லுறவைக் கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதனை கெடுத்து விடலாமென அமைச்சு கவலைத் தெரிவித்தது.
இவ்வேளையில், தென் சீனக் கடல் விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாட்டில் எந்தவொரு மாற்றமுமில்லை;
1979-ஆம் ஆண்டு மலேசிய வரைப்படத்தின் அடிப்படையில், நாட்டின் இறையாண்மையும், அது தொடர்பான உரிமைகளும் தொடர்ந்து கட்டிக் காக்கப்படும்;
தென் சீனக் கடல் பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும், பாதுகாப்பும் நீடிப்பதை, அரச தந்திர முறையில் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் மலேசியா உறுதிச் செய்யும் என விஸ்மா புத்ரா தெளிவுப்படுத்தியது.
தென் சீனக் கடலில் பெய்ஜிங் உரிமைக் கோரும் பகுதியில் மலேசியா அத்துமீறியிருப்பதாக, கசிந்த அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வளமிக்க அப்பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளையும் மலேசியா உடனடியாக நிறுத்திட வேண்டுமென சீனா அதில் வலியுறுத்தியுள்ளதாம்.