
பட்டர்வெர்த், செப்டம்பர் 4 – செயின்ட் மார்க்ஸ் இடைநிலைப் பள்ளியிலுள்ள, ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்ட இரசாயனக் கசிவால், சம்பவத்தின் போது அப்பள்ளியில் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் நிலைமை விரைந்து சீர் செய்யப்பட்டது.
அந்த இரசாயனக் கசிவு தொடர்பில், காலை மணி 9.56 வாக்கில், அவசர அழைப்பு கிடைத்ததை, பினாங்கு மாநில தீயணைப்பு மீட்புப் படை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லிட்டர் அளவுள்ள ‘எத்தனாயிக்’ வகை அமில போத்தல் உடைந்து கசிவு ஏற்பட்டதை கண்டுபிடித்தனர்.
கட்டடத்தை முதலில் காலி செய்த பின்னர், கசிந்த அமிலத்தை துப்புரவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.