
கோலாலம்பூர், பிப் 20 – நாட்டின் எல்லையைத் திறப்பதற்கு இவ்வாண்டு இரண்டாம் காலாண்டின் தொடக்கம் சிறந்த தருணமாக அமையுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.
எல்லை திறப்பு குறித்து வழிகாட்டியைத் தயார் செய்ய சுகாதார அமைச்சுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். அதனால் நாட்டின் எல்லை இரு வாரங்களில் திறக்கப்படுமென அர்த்தமாகாது.
அத்தகைய முடிவை சுகாதார அமைச்சு தனியாக எடுக்க முடியாது. அதன் தொடர்பான வழிகாட்டி முறையை பிரதமர் தலைமையிலான கோவிட் தொற்றை நிர்வகிக்கும் செயற்குழுவிடம் கொண்டு செல்ல வேண்டும். கோவிட் தொற்று விவகாரத்துடன் சார்புடைய அமைச்சுகள் கூடிய செயற்குழுவிடமும் தாக்கல் செய்ய வேண்டும்.
பின்னர் அமைச்சரவையில் அந்த விவகாரம் முன் வைக்கப்பட்டு, எல்லை திறப்பு குறித்த தேதியை பிரதமர் முடிவு செய்வார் என கைரி கூறினார்.