கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – நாட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்திருக்கிறார்.
போக்குவரத்துச் சட்ட அமலாக்கத்தில் காணப்படும் பலவீனம் மற்றும் சாலை பராமரிப்பு தொடர்பான பிரச்சனைகளால் இந்த விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார், அவர்.
இந்த விவகாரம் குறித்துப் பாதுகாப்பு சமூக கூட்டமைப்பின் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தையும் (Tan Sri Lee Lam Thye) கவலையை வெளிப்படுத்தியதாகப் பிரதமர் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
நேற்று தம்முடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை நடத்திய லீ லாம் தையுடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் சாலை பாதுகாப்பு மற்றும் வேலையிட பாதுகாப்பும் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
இத்தகைய அமைப்புகளும் இதர அரசு சாரா இயக்கங்களும் நிலையான பாதுகாப்பை உறுதி செய்து, சமூகத்திற்குத் தொடர்ச்சியாகச் சேவைகளை வழங்கி வர வேண்டும்.
அதேவேளையில், மலேசிய மடானி கோட்பாட்டுத் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் உரியப் பங்கினை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.