
நியூயார்க், ஜன 24 – இருமல் மருந்துகளை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினரை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இருமல் மருந்துகளால் குறைந்தது ஏழு நாடுகளில் சிறார்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உலக சுகாதார நிறுவனம் அந்த வலியுறுத்தலை முன் வைத்துள்ளது.
போலி இருமல் மருந்துகள் அல்லது பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படாத மருந்துகளை அடையாளம் காணவும், அவற்றை உடனடியாக சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளவும் அது அவசியமாக கருதப்படுகிறது.
அண்மைய சில காலமாக, மருத்துவரின் அனுமதி கடிதம் இன்றி வாங்க முடிகின்ற இருமல் மருந்துகளால், மூன்று நாடுகளை சேர்ந்த முறைந்தது 300 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உலக சுகாதார நிறுவனம் அவ்வாறு கருத்துரைத்தது.
எனினும், சம்பந்தப்பட்ட நாடுகளின் விவரங்களை அது வெளியிடவில்லை. இதற்கு முன், காம்பியா, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.