கோலாலம்பூர், நவம்பர்-13 – கிள்ளான் பள்ளத்தாக்கில் 2018-ஆம் ஆண்டிலிருந்து 44 இரும்புப் பெட்டிகளை உடைத்துக் கொள்ளையிட்ட வியட்நாமிய கும்பலை போலீஸ் சுட்டு வீழ்த்தியுள்ளது.
புக்கிட் பிந்தாங், ஜாலான் இம்பியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடியின் 17-வது மாடியிலுள்ள வீட்டை நேற்றிரவு முற்றுகையிட்ட போலீஸ், நான்கு ஆடவர்களைச் சுட்டுக் கொன்றது.
அந்த Ops Tepuk சோதனையின் போது கோலாலம்பூர் மற்றும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த போலீஸ் குழு அவர்களைக் கைதுச் செய்ய முயன்றது.
ஆனால் அதற்கு மறுத்த அக்கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட்டதால், தற்காக்க வேண்டி வேறு வழியில்லாமல் போலீசும் திரும்பி சுட வேண்டியதாயிற்று என, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹமட் இசா தெரிவித்தார்.
போலீசைத் தாக்க அக்கும்பல் பயன்படுத்திய 2 பாராங் கத்திகளும், கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டுக்குள் வருவதும் போவதுமாக இருந்து வந்த அந்த பலே கும்பல் இதுவரை 4.3 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளது.
அக்கும்பலைச் சேர்ந்த எஞ்சியவர்களையும் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.