
ஜோகூர் பாரு, மார்ச் 31 – நேற்று முன்தினம் ஜோகூர், Jalan Abdullah Tahir சாலை நடுவே இரு கும்பல்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 3 உள்நாட்டு ஆடவர்களைப் போலீஸ் கைது செய்தது.
சம்பவம் நிகழ்ந்த அன்றே காலை மணி 5.15 அளவில் அம்மூவரும் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் எழுவரைத் தேடி வருவதாகவும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்.
அந்த அடிதடி தொடர்பில், இரு உணவுக் கடை நடத்துநர்களிடம் இருந்து போலீஸ் புகார் பெறப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த போலீஸ் புகாரில், புகார் கொடுத்தவர்கள் , உள்நாட்டைச் சேர்ந்த ஆடவர்கள் சிலர் தங்களை பேஸ்பால் ( Baseball) கட்டையாலும், மரக் கட்டையாலும் தாக்கியதாக குறிப்பிட்டிருப்பதாக Datuk Kamarul குறிப்பிட்டார்.
முன்னதாக , வெள்ளை- கறுப்பு சட்டை அணிந்திருந்த ஆடவர்கள் சிலர் அடிதடியில் ஈடுபட்ட 2 நிமிட காணொளி சமூக வலைத்தலங்களில் பெரிதும் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.