
Penang Fellowship சைக்கிளோட்டத்திற்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை, பினாங்கிலுள்ள இரு பாலங்களும், சில சாலைகளும் கட்டங் கட்டமாக போக்குவரத்துக்கு மூடப்படும். அதிகாலை மணி 6.30-க்கு தொடங்கும் அந்த சைக்கிளோட்டம், கடந்து செல்லவிருக்கும் 66 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் செ தெரிவித்தார்.
இரு பினாங்கு பாலங்களையும் அது உட்படுத்தியிருக்கும் என்பதால், குறிப்பிட்ட நேரங்களில் அப்பாலங்களின் ஒருவழிப் பாதை முழுமையாக மூடப்படும். குறிப்பாக, தீவிலிருந்து, செபராங் பெராய் நோக்கி செல்லும் பினாங்கு பாலம், அதிகாலை மணி 6.30 தொடங்கி ஒன்பது வரை மூடப்படும் வேளை; பத்து காவானிலிருந்து, பத்து மாவோங் வரையிலான சுல்தான் அப்துல் ஹாலிம் முஹாட்சாம் ஷா பாலத்தை காலை மணி ஒன்பது தொடங்கி நண்பகல் மணி 12 வரை பயன்படுத்த முடியாது. இம்முறை, Penang Fellowship சைக்கிளோட்டத்தில், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஈராயிரத்து 500 பேர் பங்கேற்கவுள்ளனர்.