
புத்ராஜெயா, செப்டம்பர் 25 – கடந்த புதன்கிழமை, புத்ராஜெயா, பெர்சியாரான் உத்தாராவில், 14 வாகனங்களை உட்படுத்திய விபத்தில், இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழக்க காரணமாக இருந்த லோரி ஓட்டுனர், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை செலுத்தியதால், 25 வயது பாரிஸ் ஹசிக் அபு பாகார், 39 வயது யுஸ்வார் முஹமட் யூனோஸ் ஆகியோருக்கு மரணம் விளைவித்ததாக, 29 வயது முஹமட் இஜாதுல் சாபிக் மொசாஹரி எனும் அந்த லோரி ஓட்டுனர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்தாண்டுகளுக்கு குறையாத, பத்தாண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரிங்கிட்டுக்கு குறையாத 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேற்போகத அபராதமும் விதிக்கப்படலாம்.
ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் முஹமட் இஜாதுலை இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 25-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, 14 வாகனங்களை உட்படுத்திய வாகன விபத்தில், இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுனர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.