
கோலாலம்பூர், செப் 18 – இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் பொருட்களின் விலை உயர்வு குறித்து விவாதிக்க ஆராவ் எம்பி டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் தாக்கல் செய்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. துணை சபாநாயகர் டத்தோ ராம்லி முகமட் நோர் , சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் எழுதிய கடிதத்தைப் படித்து, தற்போதைய ஆறு நாள் சிறப்பு அமர்வு நடவடிக்கைகளின் கீழ் பட்டியலிடப்படாததால் அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது என்றார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய நிரந்தர விதிமுறைகளின்படி இந்த தீர்மானத்தை கொண்டுவர அனுமதிக்க முடியாது என ராம்லி தெரிவித்தார்.
55 எம்.பிக்களிடமிருந்து அமைச்சுகள் கேள்விகளை பெற்றுள்ளதால் அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டியுள்ளதாக ராம்லி கூறினார். வெள்ளிக்கிழமை செப்டம்பர் 15ஆம் தேதியன்று அந்த தீர்மானத்திற்கான மனுவைத் தாம் தாக்கல் செய்ததாகவும் ஆனால் இன்று வரை எந்த பதிலும் இல்லை. முக்கியமான விவகாரமாக இருப்பதால் அந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என இதற்கு முன் ஷாஹிடான் காசிம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.