கொழும்பு, நவம்பர்-15 – இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடத்தப்பட்ட திடீர் தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்க தலைமையிலான இடச்சாரி கூட்டணிக்கு, அந்நாட்டு மக்கள் அமோக வெற்றியை அளித்திருக்கின்றனர்.
மொத்தமுள்ள 225 நாடாளுமன்றத் தொகுதிகளில் அனுரவின் NPP கூட்டணி 107 இடங்களைக் கைப்பற்றி, 62 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
ஆட்சியமைக்க வெறும் 113 இடங்கள் மட்டுமே தேவையாகும்; முன்னிலை நிலவரங்களைப் பார்த்தால் அக்கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நாடாளுமன்றத்தில் 196 பேர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சிய 29 இடங்கள் வாக்குகள் அடிப்படையில் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
பல ஆண்டுகளாக குடும்ப அரசியல் ஆதிக்கம் நிலவி வந்த இலங்கையில், செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாரா வகையில் திசநாயக்க அபார வெற்றிப் பெற்றார்.
எனினும், அப்போதைய நாடாளுமன்றத்தில் அவரின் கூட்டணிக்கு 4 இடங்கள் மட்டுமே இருந்ததால், ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் சிக்கலை எதிர்நோக்கினார்.
எனவே மக்களிடமிருந்து புதிய அதிகாரம் பெற வேண்டி, நாடாளுமன்றத்தைக் கலைத்து அவர் திடீர் தேர்தலுக்கு உத்தரவிட்டார்.