கொழும்பு, செப்டம்பர்-26 – இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கையோடு நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளார் அநுர குமார திசநாயக்க.
இதையடுத்து நவம்பர் 14-ஆம் தேதி அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது.
நடப்பு நாடாளுமன்ற தவணை முடிவடைய இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன.
எனினும், அநுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 4 MP-கள் மட்டுமே உள்ளதால், அவரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முந்தைய அரசாங்கங்களின் ஊழல், வீண் விரயம், மோசடி முறைகேடுகளுக்கு எதிரான புதிய சட்டங்கள் உள்ளிட்ட 23 அதிரடி மாற்றங்களை அமல்படுத்தப் போவதாக அநுர வாக்குறுதியளித்திருந்தார்.
எனவே இப்போதே தேர்தலை நடத்தி வெற்றிப் பெற்று, கூடுதல் பலத்துடன் நாடாளுமன்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே 56 வயது அநுரவின் திட்டமாகும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 225; அதில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 இடங்கள் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.