
கொழும்பு, ஏப்ரல்-6- இலங்கையைப் பயன்படுத்தி இந்தியாவைத் தாக்கவோ அல்லது தெற்காசிய வட்டார நிலைத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கவோ யார் நினைத்தாலும் அது நடக்காது.
அப்படி ஒரு நிலைமைக்கு இலங்கை ஒருபோதும் இடமளிக்காது என, அதன் அதிபர் அனுர குமார திசநாயக்க உத்தரவாதமளித்துள்ளார். பேங்கோக்கிலிருந்து கொழும்பு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று உபசரித்த நிகழ்வில் அவர் அவ்வாறு பேசினார்.
அந்நிகழ்வில் மோடிக்கு ‘மித்ரா விபூஷனா’ எனும் விருதையும் திசநாயக்க வழங்கி கௌரவித்தார். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும்.
அவ்விருதை பெற்றுக் கொண்டு வழங்கிய ஏற்புரையில், இரு நாடுகளும் தற்காப்பு விஷயத்தில் தொடர்புடையவை என்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதையும் மோடி சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில் சிறுபான்மை தமிழ் மக்களின் நல்வாழ்வுக்குண்டானதை செய்யும் கடப்பாட்டை இலங்கை மறுஉறுதி படுத்தியிருப்பதாக, மோடி கூறினார்.
உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய தேச மறுநிர்மாணிப்பு மற்றும் தேசிய நல்லிணக்க முயற்சி பற்றி விவாதித்தோம்; அதில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கைக் கடைபிடிக்க திசநாயக்க உறுதியளித்திருப்பதாக மோடி குறிப்பிட்டார்.
தமிழக மீனவர் விவகாரத்தில் மனிதநேய அணுகுமுறையின் அவசியத்தையும் எடுத்துரைத்தோம்; எனவே கைதான மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தியதாக மோடி கூறினர்.