பாங்கி, டிசம்பர்-24 – கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் ஆண்டிறுதி விடுமுறையை ஒட்டி நாடளாவிய நிலையில் இன்று போக்குவரத்து அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாள் இலவச டோல் கட்டணச் சலுகை இன்றே கடைசி என்பதால், இன்று நள்ளிரவுக்கு முன்பாக போக்குவரத்து மிகுந்து காணப்படுமென, மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM-மின் போக்குவரத்து மேலாண்மை மையம் கூறியது.
குறிப்பாக இன்று மாலை வேலை நேரம் முடிந்ததும் அதிகரிக்கும் போக்குவரத்து நள்ளிரவு வரை நீடிக்குமெனக் கணிக்கப்படுகிறது.
நேற்று முந்தினம் நெடுஞ்சாலைகளை 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்திய நிலையில், நேற்று அவ்வெண்ணிக்கை 4.25 விழுக்காடு அதிகரித்து 2.37 மில்லியனாக பதிவாகியதாக அம்மையம் கூறியது.
எனினும், ஆக அதிகமாக கடந்த சனிக்கிழமை, டிசம்பர் 21-ஆம் தேதி முக்கிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 2.52 மில்லியன் வாகனங்கள் பயணித்ததாக, Buletin TV3-விடம் அது தெரிவித்தது.
இந்த பெருநாள் காலம் முழுவதும் முக்கிய நெடுஞ்சாலைகளில் நாளொன்றுக்கு 2.55 மில்லியன் வாகனங்கள் பயணிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வாகனமோட்டிகள் பயணத்தை நன்குத் திட்டமிட்டு பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.