பிரிசிலியா, அக்டோபர்-9 – பிரேசிலில் இலோன் மாஸ்கின் X தளத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஒருவழியாக நீக்கியிருக்கிறது.
நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்ததால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த லத்தின் அமெரிக்க நாட்டில் X தள பயன்பாடு முடக்கப்பட்டது.
எனினும், மில்லியன் டாலர் கணக்கான அபராதங்களைச் செலுத்தியதை அடுத்து, X தளத்தின் மீதான தடையை உச்ச நீதிமன்றம் உடனடியாக அகற்றி உத்தரவிட்டது.
X தளம் அடுத்த 24 மணி நேரங்களில் பழையபடி சேவையைத் தொடரலாம் என நீதிபதி அறிவித்தார்.
2022 பிரேசில் அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் X தளம் ஏராளமான உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பியதாக, இலோன் மாஸ்க்குக்கும் பிரேசில் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே முன்னதாக மோதல் வெடித்தது.
பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் நீதிமன்றம் தடை போடுவது முறையற்றது என மாஸ்க் சாடியிருந்தது உலக கவனத்தை ஈர்த்தது.
மோதல் முற்றி ஆகஸ்ட் வாக்கில் X தளம் முடக்கப்பட்ட நிலையில், இப்போது இலோன் மாஸ்க் சற்று இறங்கி வந்து பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.