ஜோகூர் பாரு, ஏப்ரல் 9 – இல்லாத ஆன்லைன் முதலீட்டு மோசடியால், முன்னாள் பொது பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், ஒரே நாளில், பத்து லட்சம் ரிங்கிட்டுக்கும் கூடுதலான பணத்தை இழந்தார்.
அச்சம்பவம் தொடர்பில், அந்த 61 வயது நபர், மார்ச் 22-ஆம் தேதி போலீஸ் புகார் செய்ததை, ஜோகூர் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
கடந்தாண்டு டிசம்பர், முகநூலில், விளம்பரம் இன்றை கண்ட அந்நபர், வாட்ஸ்அப் வாயிலாக சம்பந்தப்பட்ட தரப்பை தொடர்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, அவருக்கு கோல்ட் ஃபியூச்சர்ஸ் XAUUSD வர்த்தகப் பங்குகளின் முதலீடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அந்த முதலீட்டு திட்டத்தில், முதலீடு செய்தால் ஐந்து முதல் எட்டு விழுக்காடு வரையில் இலாபம் பெறலாம் எனவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
அதனை நம்பி, தம்மிடம் இருந்த பத்து லட்சத்து அறுபதாயிரம் ரிங்கிட் பணத்தை, வங்கி கணக்கு ஒன்றில் செலுத்திய அந்நபர், பின்னர் அப்பணத்தை மீண்டும் எடுக்க முடியாமல் போனதை அடுத்து, தாம் ஏமார்ந்து விட்டதை உணர்ந்து போலீஸ் புகார் செய்ததாக குமார் சொன்னார்.
அந்த மோசடி சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் வரையிலான சிறையுடன், அபராதமும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.