
மலாக்கா, அலோர் காஜாவில், கடந்தாண்டு மே மாதம், இல்லாத நிலத்தை, 60 ஆயிரத்து 661 ரிங்கிட்டுக்கு விற்றதாக, துப்புரவு நிறுவனத்தின் நிர்வாகி எஸ்.சிவசங்கருக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், அந்த 41 வயது ஆடவர் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
அலோர் காஜா மற்றும் ஜாசின் சுற்று வட்டாரப் பகுதிகளில், இல்லாத நிலத்தை விற்பதாக கூறி அறுவரை சிவசங்கர் ஏமாற்றியதாக இன்று அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
அதனால், 36 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்ட அந்த அறுவரும், கட்டம் கட்டமாக ஈராயிரம் ரிங்கிட் முதல் 33 ஆயிரத்து 120 ரிங்கிட் வரை பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு மே தொடங்கி இவ்வாண்டு மார்ச் வரையில் சிவசங்கர் அந்த குற்றத்தை புரிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள் சிறைத் தண்டனை, பிரம்படி, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.
28 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையில் சிவசங்கரை இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் 23-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.