குவாலா திரங்கானு, நவம்பர்-16 – குவாலா திரங்கானுவைச் சேர்ந்த 67 வயது வர்த்தகர், இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி 5.2 மில்லியன் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
சீனாவில் பங்கு விற்பனை முதலீடு என்ற பெயரில் செப்டம்பரில் முகநூல் விளம்பரத்தைப் பார்த்து அவர் கவரப்பட்டுள்ளார்.
அதில் முதலீடு செய்தால் குறுகிய காலத்திலேயே அதிக இலாபம் பார்க்கலாம் என அவரிடம் ஆசை வார்த்தைக் கூறப்பட்டது.
ஆர்வ மிகுதியில், ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து முதலீட்டில் பதிந்துகொண்டு 30,000 ரிங்கிட்டையும் அவர் மாற்றி விட்டார்.
அதற்கான இலாபம் உயர்ந்து வருவதை அச்செயலி வாயிலாக கண்டு மகிழ்ந்த அம்முதியவர், அடுத்தடுத்து 50,000 ரிங்கிட்டையும் 20,000 ரிங்கிட்டையும் முதலீடு செய்தார்.
தொடக்கத்தில் இலாபத் தொகையை அவர் வெற்றிகரமாக எடுக்கவும் செய்துள்ளார்.
சுளையாக 89,800 ரிங்கிட் பணம் கிடைத்ததால் அம்முதலீட்டுத் திட்டம் மீதான அவரின் நம்பிக்கை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், 240,000 ரிங்கிட்டை மீண்டும் பங்கு முதலீட்டில் போட்டுள்ளார்.
ஆனால், இனி இலாபத் தொகையை மீட்க வேண்டுமென்றால் மேலும் பணம் கட்ட வேண்டுமென ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டது.
கொஞ்சமும் யோசிக்காதவராய், 13 தடவையென 7 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தமாக 5.2 மில்லியன் ரிங்கிட் பணத்தை அவர் மாற்றியுள்ளார்.
அதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வந்து அவர் போலீசில் புகார் செய்தார்.