புத்ராஜெயா, மார்ச் 4 – கோவிட் தடுப்பூசி செலுத்திய 3 வாரங்களுக்கும் குறைவான கால கட்டத்தில், திடீரென இறந்த இளைஞர் ரெவ்னெஷ் குமாரின் உடலின் திசுக்களின் மீது, மேலும் சில சோதனைகளைச் செய்ய சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அந்த திசுக்களின் மாதிரியை வெளிநாட்டிற்கு அனுப்பி சோதனையை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தற்போதைக்கு அந்த இளைஞரின் மரணம் தொடர்பில் இதுவரை மேற்கொண்ட சவப் பரிசோதனையின் முடிவு, இதர சோதனைகளின் முடிவு ஆகியவை, அடுத்த திங்கட்கிழமை தடயவியல் நிபுணர்களுடன் நடத்தப்படும் சந்திப்பின்போது கலந்து பேசப்படுமென அமைச்சர் கூறினார். அந்த முடிவுகள் பின்னர் ரெவ்னேஷின் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளப்படுமென்றாரவர்.
முன்னதாக, கைரி ஜமாலுடின், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம், செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் Dr. Emizam Mohamadon ஆகியோர் ரெவ்னெஷின் பெற்றோரான நரேஷ் குமார், விஜயராணி ஆகியோருடன் அரை மணி நேரம் சந்திப்பு நடத்தினர்.