தெலுக் இந்தான் , ஏப் 15 – நாடு முழுமையிலும் 3,038 பள்ளிகள் குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகளாக பதிவு பெற்றுள்ளன. அந்த பள்ளிகள் ஒவ்வொன்றும் மொத்தம் 150 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளன. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் என்ற பிரிவின் கீழ் அந்த பள்ளிகள் இருந்தாலும் அப்பள்ளிகள் மீது அமைச்சு தொடர்ந்து கவனம் செலுத்திவரும் என்பதோடு அவற்றில் எந்த பள்ளிகளும் மூடப்படாது என்று கல்வித்துறை துணையமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார். அனைத்து வகை பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் மற்றும் சீரான மேம்பாட்டு பணிகளுக்கு மான்யங்கள் வழங்கப்படும் என Ulu Bernam Ladang Sungai Samak தமிழ்ப் பள்ளியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறினார்.
பேராவில் மட்டும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 419 பள்ளிகள் இருப்பதோடு மாணவர்களின் எண்ணிக்கை பாராபட்சமின்றி அனைத்து அரசாங்க பள்ளிகளுக்கும் இவ்வாண்டு மாநில கல்வித்துறை 38,000 ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருப்பதாக Wong Kah Woh தெரிவித்தார். குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்காக பல்வேறு சிறப்பு செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வகுப்புகளை இணைத்து நடத்துவது , பள்ளிகளை இணைப்பது மற்றும் பள்ளிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதும் இந்த செயல்முறை திட்டங்களில் அடங்கும் என அவர் தெரிவித்தார். 30 அல்லது அதற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் 2,3,4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணர்களை ஒன்றிணைத்து வகுப்புக்களை நடத்தும் திட்டமும் இவற்றில் அடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.