கோலாலம்பூர், ஜனவரி-11, எதிர்வரும் ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.11 மணிக்கு தை மாதம் பிறக்கிறது.
இதையொட்டி வீட்டில் சூரியப் பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை 7.30 மணிக்கு மேல் காலை 10 மணி வரையிலும், பின்னர் மாலை 5.30 மணிக்கு மேலிருந்து 6.30 மணி வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவற்றைப் பின்பற்றி மக்கள் வீடுகளில் பொங்கல் வைக்கலாம் என, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவரும் அறங்காவலருமான தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
இவ்வேளையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட அனைத்து 3 முக்கியக் கோயில்களிலும் அன்றைய தினம் தைப்பொங்கல் விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில், பத்துமலைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் ஆகியவையே அம்மூன்று கோயில்களாகும்.
தை முதல் நாள் காலை 9.30 மணிக்கு மூன்று கோயில்களிலும் பொங்கல் பானை வைக்கப்படும்.
பிறகு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் என நண்பகல் வரை நிகழ்வுகள் தொடருமென்றார் அவர்.
அனைவரும் பொங்கல் வைத்து தை மாதத்தை சிறப்போடு வரவேற்போம் என தான் ஸ்ரீ நடராஜா வாழ்த்தினார்.