
கோலாலம்பூர், ஏப் 22 – அண்மையில் Turkiye க்கு விடுமுறையில் சென்றிருந்தபோது ஏற்பட்ட சிரமத்திற்காக ஒரு குடும்பத்தினரிடம் மலேசிய ஏர்லைன்ஸ் தனது மன்னிப்பை கேட்டுக்கொண்டது. அந்த குடும்பத்தினர் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கான காரணத்தை ஆராயவிருப்பதாகவும் மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்து. ஏப்ரல் 18 ஆம் தேதியன்று பயணி Atieqah Azri யிடம் தொடர்புக் கொண்டு விசாரணை குறித்த முன்னேற்றங்களை தெரிவித்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்தான்புல்லில் நகரில் நிலைமையை கையாள்வதில் Qatar Airways சும் சம்பந்தப்பட்டுள்ளதால் விசாணையின் மேம்பாட்டின் இறுதிவிவரங்களையும் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட பயணியுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதோடு , அந்த பயணிக்கு முழுமையான விளக்கம் மற்றும் தீர்வும் தெரிவிக்கப்படும் என மலேசிய ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் 2ஆம்தேதி இஸ்தான்புல்லியிருந்து கோலாலம்பூர் திரும்பியபோது தமது குழந்தைக்காக சேர்க்கப்ட்ட விமான டிக்கெட் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என Qatar ஏர்வெய்ஸ் டிக்கெட் முறையில் தெரியவந்ததால் தாமும், தமது கணவர் மற்றும் 6 மாத மகன் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டதாக தமது முகநூலில் Atiqeh பதிவிட்டிருந்ததோடு தமக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் முழு பொறுப்பை ஏற்கவேண்டும் என கூறியிருந்தார். அதன் பிறகு வேறு வழியின்றி தாமும் தமது குடும்பத்தினரும் 8,000 ரிங்கிட் செலுத்தி புதிய விமான டிக்கெட்டுகளை வாங்கி நாடு திரும்பியதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். நாட்டிற்கு திரும்பியபின் தமது குடும்பத்தினர் விமான நிறுவனத்திற்கு பல முறை முறையிட்டும்
மலேசியன் ஏர்லைன்ஸ் கண்டுகொள்ளாமல் இருந்ததால் வேறு வழியின்றி சமூக வலைத்தளம் மூலம் தமது பிரச்சனையை வெளியிட்டதாக Atieqah தெரிவித்திருந்தார்.