ஷா ஆலாம், ஏப்ரல் 8 – அண்மையில், தலைநகரில் கைதுச் செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவனுக்கு, துப்பாக்கியை விநியோகித்ததாக நம்பப்படும் கணவன் மற்றும் மனைவிக்கு எதிராக இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 43 வயது அப்துல் அஜும் முஹமட் யாசின் மற்றுன் 41 வயது ஷரிபா பராஹா சையிட் ஹுசைன் எனும் அவ்விருவரும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
மார்ச் 29-ஆம் தேதி, இரவு மணி எட்டு வாக்கில், குவாலா சிலாங்கூரிலுள்ள, கம்போங் புக்கிட் பெலிம்பிங்கிலுள்ள வீடொன்றில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
1971-ஆம் ஆண்டு, ஆயுதச் சட்டத்தின் கீழ், அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டபட்டுள்ள வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால், 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அவ்விருவரும் இன்று ஜாமினில் விடுவிக்கப்படாத நிலையில், இவ்வழக்கு விசாரணை ஜூன் 11-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, தலைநகர், ஜாலான் அம்பாங்கிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில், கடந்த காதம் 27-ஆம் தேதி கைதான இஸ்ரேலிய ஆடவனுக்கு, துப்பாக்கிகளை விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பில், மார்ச் 29-ஆம் தேதி, குவாலா சிலாங்கூர், ரமலான் சந்தையிலிருந்து, கணவன் மனைவி கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.