கோலாலம்பூர், செப்டம்பர் -1, இஸ்ரேலுக்கு ஆதரவான பன்னாட்டு நிறுவனங்களை மலேசியர்களும் அனைத்துலகச் சமூகமும் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டுமென, மலேசிய உலமாக்கள் சங்கம் (PUM) கேட்டுக் கொண்டுள்ளது.
அது வெறும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கை அல்ல ; அதற்கும் அப்பாற்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் Wan Mohammad Sheikh Abdul Aziz தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடுமைகளைத் தட்டிக் கேட்க இது போன்ற புறக்கணிப்புகள் முக்கியம் என்றார் அவர்.
நாம் ‘குடைச்சல்’ கொடுப்பதை நிறுத்தி விட்டால் இஸ்ரேலின் அட்டூழியம் தொடரும்; அதை அனுமதிக்கக் கூடாதென அவர் சொன்னார்.
இஸ்ரேலுக்கு ஆதரவானவை என முத்திரைக் குத்தப்பட்ட நிறுவனங்களைப் புறக்கணிப்பதென்பது, பாலஸ்தீன விவகாரத்தில் ஓர் ஆக்ககரமான பலனைத் தராது என, மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் கூறியிருந்ததற்கு பதிலடியாக PUM தலைவர் அவ்வாறு தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கியது.
அதில் அப்பாவி பாலஸ்தீனர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதைக் கண்டிக்கும் வகையில், உலகளவில் புறக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
மலேசியாவிலும் துரித உணவகங்கள் உட்பட இஸ்ரேலுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு, நட்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.