டெல் அவிவ், அக்டோபர் -8, இஸ்ரேல் மீது ஈரான் திடீர் தாக்குதலை நடத்தி மத்திய கிழக்காசிய பதட்டத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளது.
ஈரான் விடிய விடிய நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 180 குண்டுகள் இஸ்ரேலிய மண்ணை நோக்கிப் பாய்ந்தன.
அவற்றில் 90 விழுக்காடு குண்டுகள் இலக்கை அடைந்து சேதம் உண்டாக்கியதாக ஈரான் கூறிக் கொண்டாலும், இஸ்ரேலிய இராணுவம் அதனை மறுத்துள்ளது.
சில குண்டுகள் மட்டுமே தரையில் விழுந்தன; மற்றவை இஸ்ரேலிய இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாக அது கூறியது.
அத்தாக்குதல் குறித்து கடும் சினம் தெரிவித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹு, ஈரான் மாபெரும் தவறிழைத்து விட்டதாகச் சொன்னார்.
அதற்கான விலையை அது கொடுத்தே ஆக வேண்டும் என கர்ஜித்த நேத்தன்யாஹு, ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விளைவுகள் மோசமாக இருக்கும் என சூளுரைத்தார்.
எனினும், சொந்த தற்காப்புக்காகவே ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஹமாஸ் இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா தரப்புகளின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு வஞ்சம் தீர்ப்பதே அந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
தலைமையை இழந்து தவிக்கும் தொண்டர்களுக்கு வேண்டி இஸ்ரேலுக்கு எதிரான சபதத்தை முடிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் எந்தவித பதிலடிக்கும் தயாராக இருப்பதாகவும் தெஹ்ரான் சூளுரைத்துள்ளது.
பாலஸ்தீன ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே (Ismail Haniyeh), ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசான் நஸ்ரல்லா (Sayyed Hassan Nasrallah) உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் அண்மையில் அடுத்தடுத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் ஈரான் மோதலில் அமெரிக்காவின் நகர்வு எப்படியிருக்கப் போகிறது என்பது குறித்தும் பீதி நிலவுகிறது.