கோலாலம்பூர், ஆக 12 – இஸ்லாத்தை பரப்பும் நோக்கில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லோதோரின் ஆலயங்களுக்குள் நுழையலாம் எனும் திரெங்கானு முப்தி Datuk Mohamad Sabri Haron-னின் கூற்றுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது
பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழு.
இவரின் இந்த கூற்று முஸ்லிம் அல்லாதோரின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதோடு, இன பாகுபாட்டிற்கும் வழிவகுத்துள்ளதாக அக்குழு கூறியுள்ளது.
“முஸ்லிம்கள் இன மத ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் ஆலயங்களுக்குள் நுழைவதாக இருந்தால் அது வரவேற்கப்படுகிறது. ஆனால் அதுவே அவர்களின் செயல் இஸ்லாத்தை பரப்புவதாக இருந்தால் அது கண்டிக்கத்தக்கது” என அக்குழு தெரிவித்திருக்கிறது.
அண்மையில், பேராக் இஸ்லாமிய துறையைச் சேர்ந்தவர்கள் ஆலயத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் ஒருவர், இந்து சமயத்திற்கும் இஸ்லாத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக கூறியிருந்தார். அது பல்வேறான கண்டனத்திற்கு ஆளாகியிருந்தது.
இந்நிலையில், பிற மதத்தினரின் உணர்வுகளை மதித்து நடக்குமாறு திரெங்கானு முப்திக்கு அக்குழு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் இவ்வாறு கருத்துரைப்பது குற்றவியல் சட்டப்படி தவறு என்பதையும் அக்குழு முப்திக்கு நினைவுறுத்தியுள்ளது.