Latestமலேசியா

இஸ்லாமிய நிகழ்வில் பங்கேற்க முஸ்லீம் அல்லாத மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை; UiTM விளக்கம்

ஷா ஆலாம், ஜனவரி-15, UiTM எனப்படும் மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்ற ஓர் இஸ்லாமிய நிகழ்வில், முஸ்லீம் அல்லாத மாணவர்கள் பங்கேற்கக் கட்டாயப்படுத்தப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.

பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை வாயிலாக அதனைத் தெளிவுப்படுத்தியது.

சர்ச்சையாக்கப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி, ஷா ஆலாம், UiTM வளாகத்தில் உள்ள துவாங்கு மீசான் சைனால் அபிடின் மசூதியில் நடைபெற்றது.

அதில் 2,447 முதல் பருவ மாணவர்கள் பங்கேற்றனர்; அவர்களில் Kesatria Negara 1, Kembara 1, Pancaragam 1 ஆகியப் புறப்பாடத் திட்டங்களைச் சேர்ந்த 34 முஸ்லீம் அல்லாத மாணவர்களும் அடங்குவர்.

சமுதாயத்திற்கு பங்களிக்கத் தயாராக இருக்கும் மாணவர்களை உருவாக்கும் UiTM-மின் நோக்கத்திற்கு ஏற்ப, குணநலன், அறிவுசார் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் அந்நிகழ்வு மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, முஸ்லீம் மாணவர்கள் மசூதியின் பிரதான மண்டபத்தில் இறுதிச் சடங்குகளை நிர்வகித்தல் குறித்த விரிவுரையில் கலந்துகொண்டனர்; அதே சமயம் முஸ்லீம் அல்லாத மாணவர்கள் சமூக நெறிமுறைகள் பற்றிய பேச்சில் கலந்துகொண்டனர்.

சமூக நெறிமுறைகள் பேச்சு என்பது வீட்டில், பணியிடத்தில் மற்றும் பொது இடங்களில் நெறிமுறை மதிப்புகள் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

அந்நிகழ்வுக்குப் பிறகு, முஸ்லீம் அல்லாத மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி நிர்வாகத்தை எளிதாக்குவதற்கும், நேரம் மற்றும் தளவாட வளங்களை மிச்சப்படுத்துவதற்கும், பங்கேற்பாளர்கள் இடையூறுகள் இல்லாமல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்யும் நோக்கில் தான் மசூதி மற்றும் மசூதிக்குள் அமைந்துள்ளத முக்தாமார் மண்டபத்தில் அந்நிகழ்வு நடத்தப்பட்டது.

எனினும் அந்நிகழ்வு குறித்த போஸ்டரில் இடம்பெற்ற குழப்பங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்; அதனைக் கடுமையாகக் கருதி, இனி வரும் காலங்களில் தகவல்-தொடர்பை மேம்படுத்துவோம் என UiTM உத்தரவாதம் அளித்தது.

சபா-சரவாக்கைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத மாணவர்கள் UiTM மசூதி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாக, இணைய ஊடகமொன்றில் முன்னதாக செய்தி வெளியானது.

பிரபல சமூக ஆர்வலர் சித்தி காசிமும் அது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், UiTM இவ்விளக்கத்தை அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!