ஷா அலாம், ஆக 14 – இ.பி.எப் சந்தாதாரர்கள் தங்களது சேமிப்பு தொகைக்கு வாரிசுதாரரை எழுதியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே தனது இ.பி.எப் பணத்திற்கு மனைவியை வாரிசுதாரராக பெயர் எழுதியும் நேற்று முன் தினம் இ.பி.எப் அலுவலகத்தில் பரிசோதிக்க சென்றபோது அவரது கணக்கில் வாரிசு எழுதப்படவில்லை என அங்குள்ள அதிகாரிகள் கூறியதை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்ததாக ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வாரிசு எழுதப்பட்டுவிட்டது என்று உறுதியாக கூறிய பின் எங்களது சிஸ்டத்தில் உங்களது கணக்கில் வாரிசு எழுதப்படவில்லை என்று தெரிவித்தனர். அப்படியானால் வாரிசு எழுதப்பட்ட இடத்தில் வாரிசுதாரரின் பெயர் எப்படி காணாமல்போனது என்று தொடர்ந்து வினவியபோது அவர்களால் சரியான விளக்கத்தை வழங்க முடியவில்லை. எங்களது சிஸ்டத்தில் வாரிசுதாரரின் பெயர் இல்லை. எப்படி வாரிசுதாரரின் பெயர் காணாமல்போனது என்பது எங்களுக்கே தெரியவில்லை என்று கூறியது தனக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் பின்னர் 40 நிமிடங்களுப் பிறகு இ.பி.எப் அதிகாரிகள் தங்களுக்கிடையே கலந்துதாலோசித்த பிறகு ஏற்கனவே தனது மனைவியின் பெயரிலேயே மீண்டும் வாரிசாக எழுதிய கடிதத்தை வழங்கியதாக பாதிக்கப்பட்டவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டிலேயே தனது இ.பி.எப் கணக்கில் எழுதப்பட்ட வாரிசுதாரரின் பெயர் திடீரென எப்படி இல்லாமல் போனது என்பதற்கு இபி,எப் அதிகாரிகள் வழங்கிய விளக்கம் தனக்கு இன்னமும் திருப்தி அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் கூறினார். 60 வயதை நெருங்குவோர் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஏற்கனவே இந்த பிரச்சனையை எதிர்நோக்குவதால் சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் ஏற்கனவே வாரிசு எழுதியிருந்தாலும் அந்த பெயர் தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.