
கோலாலம்பூர், ஜன 24 – 55 வயதுக்கும் குறைந்த இ.பி.எப் சந்தாதாரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 10,000 ரிங்கிட்டுக்கும் குறைவான சேமிப்பையே கொண்டுள்ளனர். இந்த தொகை மிகவும் குறைவானதாக இருப்பதோடு இந்தநிலை தொடர்ந்தால் 55 வயதுக்கும் குறைந்தோர் தங்களது ஓய்வு காலத்திற்குப் பிறகு கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதிவரை 55 வயதுக்குட்பட்ட 6.67 மில்லியன் சந்தாதாரர்கள் 10,000 ரிங்கிட்டிற்கும் குறைந்த தொகையை தங்களது சேமிப்பில் கொண்டுள்ளதாக இ.பி.எப் வெளியிட்ட புள்ளி விவரம் கூறுகிறது.
51 லட்சம் பூமிபுத்ரா சந்தாதாரர்கள் கோவிட் தொற்றின் போது இ.பி.எப் மீட்பு சிறப்பு திட்டத்தில் தங்களது சேமிப்பு தொகையை மீட்டுள்ளதாக இ.பி.எப்பின் வியூக தலைமை அதிகாரி Nurhisham Hussein தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து நிதி நெருக்கடியை எதிர்நோக்கிவருவோர் இ.பி.எப்பிலிருந்து பணத்தை மீட்பதற்கு அனுமதிக்கப்படுமா என வினவப்பட்டபோது அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இது அமையும் என அவர் கூறினார்.