குவாலா கங்சார், ஏப்ரல் 9 – ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி, இரு சகோதரர்களுக்கு மரணம் விளைவித்த குத்தகையாளர் ஒருவருக்கு எதிராக, குவாலா கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 52 வயது லீ கின் பெங் எனும் அந்த ஆடவர், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான அவ்வாடவர், தனது நான்கு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்தி 17 வயது அஹ்மாட் ஜுஹால் நோர் அஹ்லான் மற்றும் 13 வயது அஹ்மாட் மரிக் ஆகிய இருவருக்கும் மரணம் விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஐந்தாம் தேதி, காலை மணி ஏழுக்கும், 7.15-க்கும் இடைப்பட்ட நேரத்தில், ஜாலான் ஈப்போ – குவாலா கங்சார் சாலையில் அவர் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ஐயாயிரம் ரிங்கிட் முதல் பத்தாயிரம் ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆறாயிரம் ரிங்கிட் உத்தரவாத தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அவ்வாடவரை இன்று நீதிமன்றம் விடுவித்த வேளை ; இவ்வழக்கு விசாரணை ஜூன் 11-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய இரு சகோதரர்கள், சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.