ஈப்போ, ஏப்ரல் 12 – பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள காலி வீட்டொன்றில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி விசாரணைக்காகக் கைதாகியுள்ளார்.
இறந்தவரின் உடலில் வீக்கங்களும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தளும்புகளும் சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, 37 வயது அந்த வெளிநாட்டுப் பெண் கைதுச் செய்யப்பட்டார்.
25 வயது அவ்வாடவரின் உடல் இன்னும் கட்டி முடிக்கப்படாத அந்தக் காலி வீட்டில் கிடப்பதைக் கண்டு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வாக்கில் பொது மக்கள் தகவல் கொடுத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Abang Zainal Abidin Abang Ahamad தெரிவித்தார்.
தொடக்கத்தில் அது ஒரு திடீர் மரணமாகவே வகைப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு தலையில் ஏற்பட்ட பலத்த காயமே அவரின் மரணத்துக்குக் காரணம் என சவப்பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியதால், கொலைச்சம்பவமாக அது மாற்றப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக Abang Zainal கூறினார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.