ஈப்போ, மே 6 – பேராக், ஈப்போ, ஜாலான் மேடான் சிப்பாங் – தைப்பிங் சாலையில், கார் ஒன்றை மடக்கி சோதனையிட்ட போலீசார், 21 கிலோகிராம் ஹெரோயின் வகை போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
அக்காரில் பயணித்த 41 வயது 47 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டதையும், பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி உறுதிப்படுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மணி 11.15 வாக்கில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அக்காரை சோதனையிட்டதில், ஹெராயின் போதைப் பொருள் அடங்கிய 46 பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த வெள்ளை சாக்கு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
அந்த சாக்கில் , மொத்தம் 21 ஆயிரத்து 37 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் இருந்த வேளை ; அவற்றின் மொத்த மதிப்பு இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 275 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதுச் செய்யப்பட்ட இரு ஆடவர்களும், கடந்த பிப்ரவரி தொடங்கி, பேராக் மாநிலத்தின் வட பகுதிகளை குறி வைத்து போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்ட போது அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ள வேளை ; அவர்களுக்கு எதிராக பழைய போதைப் பொருள் குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது,
அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ், விசாரணைக்காக அவர்கள் இம்மாதம் ஒன்பதாம் தேதி வரையில் ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.