ஈப்போ, பிப் 20 – ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையின் அவசரப் பிரிவின் வளாகத்தின் முன் கைகலப்பில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு மணி 11. 50-வாக்கில், ஜாலான் பங்லிமா புக்கிட் கந்தாங் வாஹாப் பகுதியில் உள்ள கார் நிறுத்துமிடப் பகுதியில், அந்த நபர் கைது செய்யப்பட்டதாக, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் யாஹ்யா ஹாசான் தெரிவித்தார். அந்த நபர் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக ஈப்போ, குந்தோங், ஜாலான் செகோலாவில், காதல் பிரச்சனையால் பெண் ஒருவரின் குடும்பத்தினருடன் ஆடவர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த சண்டையின் போது காயமடைந்த சிலரை ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது கைகலப்பு ஏற்பட்டது.
இவ்வேளையில், அந்த சம்பவம் தொடர்பில் , தலைமறைவாகியிருக்கும் மேலும் அறுவரைத் தேடி வருவதாக யாஹ்யா ஹாசான் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.