
சென்னை , பிப் 28 – தமிழ் நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவு மார்ச் 2 ஆம் தேதி வியாழக்கிழமை தெரியவரும். அந்த தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் 74. 9 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டு பாதுகப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணும் மையத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை மறுநாள் மதியம் 12 மணிக்குள் பெரும்பான்மையில் முன்னணி வகிக்கும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரின் விவரங்கள் தெரியவரும். திமுக காங்கிரஸ் அணியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனை கூட்டணி வேட்பாளராக திமுக நிறுத்தியுள்ளது. எடப்பாடி தலைமையிலான அதிமுகவின் சார்பில் கே.தென்னரசு போட்டியிடுகிறார். இதுதவிர நாம் தமிழர் கட்சியும் தேமுதிக வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.