Latestஉலகம்

ஹவாய் தீவில் 260 மில்லியன் டாலருக்கு நிலத்தடி பதுங்குக் குழியைக் கட்டும் மார்க் சக்கர்பெர்க்

ஹவாய், மார்ச்-6, Meta தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் எந்த சத்தமும் இல்லாமல் ஹவாய் தீவில் 260 மில்லியன் டாலர் மதிப்பிலான நிலத்தடி பதுங்குக் குழியை கட்டி வருகிறார்.

73,000 மக்கள் தொகையைக் கொண்ட தொலைதூர Kauai தீவில் சுமார் பத்தாண்டுகளாக அந்த கோடீஸ்வரர் எழுப்பி வரும் சொகுசு தோட்டத்தின் ஒரு பகுதியாக அது கட்டுப்படுகிறது.

முழு எஸ்டேட் 1,400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதில், சொந்த எரிசக்தி மற்றும் உணவு விநியோகத்தையெல்லாம் கொண்டிருக்கும் வகையில் 5000 சதுர அடி பரப்பளவில் அந்த நிலத்தடி பதுங்குக் குழி அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த Kauai தீவு, Pirates of the Caribbean, Jurassic Park போன்ற பிரபல ஹாலிவூட் படங்களுக்கு படப்பிடிப்புத் தளமாகவும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்கர்பெர்கின் கனவுத் தோட்டம் அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அந்த பதுங்குக்குழி கட்டுமானம் பரம இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

அவரும் இதுவரை மறந்தும் அதை வெளியில் காட்டிக் கொண்டதில்லை.

வெளியில் வாய்த் திறக்கக் கூடாது என அந்தக் கட்டுமானத்தில் பணிபுரிவோருக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனை மீறி விஷயத்தை வெளியில் கசிய விடுவோர் மீது நடவடிக்கைப் பாய்ந்து வருகிறது.

அக்கட்டுமானம் குறித்து சமூக ஊடகங்களில் பேசியதாகக் கண்டறியப்பட்ட தொழிலாளர்கள், எச்சரிக்கை எதுவுமின்றி வேலையில் இருந்தே நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

எனவே, எதற்குத் தேவையில்லாமல் பிரச்னையில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கட்டுமானத் தளத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குக் கூட தொழிலாளர்கள் பெரும் தயக்கம் காட்டுகிறார்களாம்.

2014-ஆம் ஆண்டு முதல் பல கட்ட பேரங்கள் வாயிலாக சக்கர்பெர்க் அந்நிலத்தை வாங்கிப் போட்டார்.

2016-அல் அங்கு தனது குடும்பத்தோடு கிறிஸ்மஸ் விடுமுறையைக் கழித்தப் புகைப் படங்களை அவர் பகிர்ந்தது மட்டும் தான் இதுவரை நமக்குத் தெரியும்; இந்த நிலத்தடி பதுங்குக் குழி கட்டுமானம் எப்போது அதிகாரப்பூர்வமாக ‘அம்பலமாகும்’ என தெரியவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!