Latestஇந்தியாஉலகம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவுக்கு இந்தியா தயார்: 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ல் தேர்தல் தொடங்குகிறது

புது டெல்லி, மார்ச் 17 – ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்ப்பார்த்திருந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை மாலை அதனை அறிவித்தது.

இந்தியாவின் புவியியல் சூழ்நிலை மற்றும் வாக்களிப்புக்கான பெரிய இட வசதி மற்றும் தளவாட தேவைகள் போன்ற காரணங்களால், தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்த வேண்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கியது.

கடைசிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவுப் பெற்றதும், ஜுன் 4-காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வேளையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 543 தொகுதிகளோடு உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தல் திருவிழாவாக இந்திய நாடாளுமன்றத் தேர்தல் விளங்குகிறது.

அதில் கிட்டத்தட்ட 97 கோடி பேர் வாக்களிக்க உரிமைப் பெற்றுள்ளனர்.

இதனால் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் நடப்பு 17-வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆளும் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிப் பெற்று, நரேந்திர மோடி பிரதமராகத் தொடருவாரா அல்லது காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்று நேரு, இந்திரா, ராஜீவ் காந்திக்குப் பிறகு அக்குடும்பத்தில் இருந்து நான்காவது தலைமுறை பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்று வரலாறுப் படைப்பாரா என்பது ஜுன் 4-காம் தேதி தெரிந்து விடும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!