கோலாலம்பூர், ஜனவரி-11, பொது இடங்களில் 2 தாக்குதல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்திருப்பது தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை; அவற்றின் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கலாமென போலீஸ் நம்புகிறது.
என்றாலும் உண்மைக் காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசேய்ன் கூறினார்.
புதன்கிழமை மதியம் ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அன்றிரவு நெகிரி செம்பிலான் நீலாயில் நடந்த பாராங் கத்தி தாக்குதல் குறித்து அவர் கருத்துரைத்தார்.
தாக்குதல்காரர்களை அடையாளம் காணும் அதே நேரம், தாக்குதலுக்கானக் காரணத்தைக் கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் பின்புலத்தையும் போலீஸ் ஆராயும்.
அவ்வகையில், இவ்விருச் சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றச் செயல் கும்பல்களால் குறிவைக்கப்பட்டிருக்கலாம்; ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகக் கூட இருக்கலாமென தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
எது எப்படி இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடருவதை போலீஸ் வேடிக்கைப் பார்க்காது; பொது அமைதியைக் கெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவை அனுபவிப்பர் என IGP எச்சரித்தார்.
முன்னதாக ஜோகூர் பாருவில் நடந்த முதல் சம்பவத்தில் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த 40 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறகு நீலாயில் உள்ள உணவகத்தில் முகமூடி கும்பல் நடத்திய பாராங் கத்தித் தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர்.
இரு சம்பவங்களிலும் சந்தேக நபர்கள் தீவிரமாகத் தேடப்படுகின்றனர்.