சிரம்பான், பிப் 25 – 446 -வது சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் நலன்கள் கட்டாயம் பேணப்பட வேண்டுமென பல முறை வலியுறுத்தியும், நாட்டில் இன்னும் சில முதலாளிமார்கள் அதனை பின்பற்றாமல் இருப்பதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
அச்சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை முதலாளிமார்கள் முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் தற்போது பணியிடங்களில் , ஆட்பலத் துறையுடன் சேர்ந்து மனிதவள அமைச்சு சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அந்த சோதனைகளின் வாயிலாக, பெரிய முதலாளிகளே சட்ட விதிகளை மீறியிருப்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே, இன்று சிரம்பானில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இந்திய நாட்டு தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டதாக, டத்தோ ஶ்ரீ எம். சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாட்டில் வேலை செய்வதற்கான அனுமதியை அந்த தொழிலாளி வைத்திருக்காதது தெரிய வந்தது.
தொழிலாளர்கள் குறிப்பாக அந்நிய நாட்டவர்களை உட்படுத்திய தொழிலாளர் விவகாரத்தில் நடப்பில் இருக்கும் விதிகளை முறைப்படி கடைப்பிடிக்கும்படி முதலாளிமார்கள் கேட்டுக் கொண்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்நிய தொழிலாளர்களை தருவித்திருக்கும் வெளிநாடுகளிடம் அவர்களது நாட்டு குடிமக்கள் முறையாக நடத்தப்படுவார்கள் என உறுதியளித்திருக்கிறோம்.
எனவே, உலக நாடுகள் மத்தியில் அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் நாட்டின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் முதலாளிமார்கள் நடந்துக் கொள்ள வேண்டாமென டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கேட்டுக் கொண்டார்.