
கடந்தாண்டு நெடுகிலும், நாடு முழுவதுமுள்ள உணவகங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு எதிராக, 76 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 30 ஆயிரத்து 648 அபராதங்கள் வெளியிடப்பட்டதாக, சுகாதார அமைச்சின், பொது சுகாதார துணை தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நோர்ஹயாத்தி ருஸ்லி தெரிவித்தார்.
சிலாங்கூரில் மிக அதிகமாக ஆறாயிரத்து 414 அபராதங்கள் வெளியிடப்பட்ட வேளை ; ஜொகூரில் மூவாயிரத்து 95 அபராதமும், பஹாங்கில் ஈராயிரத்து 935 அபராதமும், பேராக்கில் ஈராயிரத்து 808 அபராதமும், பினாங்கில் ஈராயிரத்து 725 அபராதமும் வெளியிடப்பட்டன.
அதே சமயம், இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், 37 லட்சத்து 200 ரிங்கிட்டை உட்படுத்திய 14 ஆயிரத்து 872 அபராதங்கள் வெளியிடப்பட்டுள்ளதையும், நோர்ஹயாத்தி சுட்டிக் காட்டினார்.
நாடு முழுவதுமுள்ள, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, உணவகங்கள், பொது போக்குவரத்து சேவைகள், பேருந்து நிலையங்கள், அரசாங்க கட்டடங்கள், பேரங்காடிகள், பொது கழிவறைகள், கேளிக்கை மையங்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், பொது ஓய்வுத் தளங்கள் ஆகியவற்றில் சோதனை அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.